2013, 14–ம் ஆண்டில் தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கலந்தாய்வு நடத்தி பணி வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


2013, 14–ம் ஆண்டில் தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கலந்தாய்வு நடத்தி பணி வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 8:44 PM GMT)

2013, 14–ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கலந்தாய்வு நடத்தி பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் ரூ.5 கோடியே 30 லட்சம் செலவில் புதிய தாசில்தார் அலுவலக கட்டிடம், புதிய பஸ் நிலையம் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:–

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இந்தியாவே வியக்கும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஆண்டு முதல் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷூக்கள் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் அறிவித்து உள்ளார். அரசு பள்ளிகளில் ஐ.சி.டி என்ற திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அட்டர் டிங்கர் லேப் செயல்படுத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறையில் சி.எஸ்.ஆர் நிதி மூலம் சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நிறைவேற்ற நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் முன் வரவேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கிறோம். 2013, 14–ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு எழுதி பணி வாய்ப்புக்காக 82 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்படும். இதில் பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் 45 பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. இந்த பள்ளிகளில் தற்காலிக நூலகங்கள் அமைக்கப்படும். இந்த ஆண்டு பள்ளிகளில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 414 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வை பொருத்தவரை தமிழக அரசின் அழுத்தமான கொள்கை நீட் தேர்வுக்கு விதிவிலக்கு என்பதுதான். அதைத்தான் அ.தி.மு.க. அரசு வலியுறுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story