திருச்செந்தூர்-செய்துங்கநல்லூர் வரை ரூ.37 கோடியில் இருவழிச்சாலை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


திருச்செந்தூர்-செய்துங்கநல்லூர் வரை ரூ.37 கோடியில் இருவழிச்சாலை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 21 July 2019 10:15 PM GMT (Updated: 21 July 2019 8:55 PM GMT)

திருச்செந்தூர்-செய்துங்கநல்லூர் வரை ரூ.37 கோடியில் இருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி நகரசபை பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது;-

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. திருச்செந்தூர்-நெல்லை சாலையில் செய்துங்கநல்லூர் வரை ரூ.37 கோடியில் இருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக உள்ள கோவில்பட்டி நகரிலும் போக்குவரத்து வசதிக்காக, லாயல் மில் மேம்பாலம் முதல் லட்சுமி மில் மேம்பாலம் வரை ரூ.7 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக மாற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும்.

‘நீட்‘ தேர்வு தேவையில்லை என்பது தான் அரசின் கருத்தாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த கருத்து சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நீட்‘ தேர்வில் விலக்கு பெற கடைசி வரை போராடிய நேரத்தில் தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அந்த தடை வாங்குவதற்கு காரணம் தமிழகத்தை சேர்ந்த நளினி சிதம்பரம் தான். அவர் அன்று தலையிட்டு வாதிடாமல் இருந்திருந்தால் ‘நீட்‘ தேர்வுக்கு விலக்கு கிடைத்திருக்கும். எனவே ‘நீட்‘ தேர்வை பற்றி பேசுவதற்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி கிடையாது. எங்களுடைய கொள்கை ‘நீட்‘ வேண்டாம் என்பது தான். அதற்காக இன்று வரை தடை பெற போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்.

அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படவில்லை. இதே போல் தான் கூட்டுறவு சங்க தேர்தலிலும் கூறினர். துறை ரீதியாக பல்லாயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களை ஜனநாயக முறைப்படி நடத்தி முடித்துள்ளோம். வரும் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும். அதில் அ.தி.மு.க. அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.

பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தான் முன்னெடுத்தோம். தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைக்கு ஒரு மாதிரியும், சட்டமன்றத்துக்கு ஒரு மாதிரியும் மக்கள் வாக்களிப்பார்கள். நாங்கள் எங்களது ஆட்சியின் சாதனைகளை கூறி தான் வாக்கு கேட்போம். வேலூர் மக்களவை தொகுதியிலும் தமிழக அரசின் சாதனைகளை கூறி வாக்கு கேட்போம். அந்த தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story