தமிழக தொழில் துறையில் தென் மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஏற்றுமதி ஊக்குவிப்பு முகமை முதன்மை இயக்குனர் தகவல்


தமிழக தொழில் துறையில் தென் மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஏற்றுமதி ஊக்குவிப்பு முகமை முதன்மை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 21 July 2019 9:30 PM GMT (Updated: 21 July 2019 8:55 PM GMT)

தமிழக தொழில் துறையில் தென் மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்று தொழிற்சாலைகள் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு முகமை முதன்மை இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் தொழில் தொடங்குதல் நடைமுறை எளிதாக்குதல் குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடந்தது.

இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசங்கர் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் எட்வின் சாமுவேல், வணிகவரித்துறை இணை ஆணையர் பத்மாவதி, தூத்துக்குடி நகரமைப்பு துறை உதவி இயக்குனர் மாரியப்பன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராம் மோகன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வணிக மேலாண்மை பொறியாளர் பூங்கையண்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் தொடங்குவதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து எடுத்து கூறினர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் தொழிற்சாலைகள் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு முகமை முதன்மை இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து செய்து வருகிறது. ஆனாலும், வேறு என்னென்ன நடைமுறை சிக்கல்கள் உள்ளன, அதில் என்ன சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை தொழில் முனைவோர்கள் எடுத்துக்கூற வேண்டும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் தொடங்குவதற்காக பெறப்பட்ட 700 விண்ணப்பங்களில் 500 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கி அவைகள் பணிகளை தொடங்கி உள்ளன. இதில் தொழிற்சாலைகளுக்கான 144 விண்ணப்பத்தில் 86 நிறுவனங்கள் பணிகளை தொடங்கி உள்ளன. மேலும் 25 பெரிய நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டி உள்ளார். சிறு மற்றும் குறு தொழில்கள் தொடங்குவதற்காக 12 ஆயிரம் பேர் ஒப்பந்தம் செய்து உள்ளனர். இந்த அளவுக்கு தொழில்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் துறையில் மொத்தம் ரூ.1½ லட்சம் கோடியில், சுமார் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு தென் மாவட்டங்களுக்கு வந்து உள்ளது. தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சியை பரவலாக அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதில் அரசு தீவிரமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திரளான தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய தொழில் கூட்டமைப்பு துணைத்தலைவர் பிரவீன் மேத்யூ நன்றி கூறினார்.

Next Story