ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா கோரி ஊர்வலமாக சென்று பழங்குடியினர் மனு


ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா கோரி ஊர்வலமாக சென்று பழங்குடியினர் மனு
x
தினத்தந்தி 22 July 2019 10:30 PM GMT (Updated: 22 July 2019 4:59 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே 4 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக நடந்து சென்று வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பழங்குடி இனத்தவர் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வடதில்லை பகுதியில், அரசு தாங்கல் புறம்போக்கு நிலத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த பழங்குடி இனத்தவர் சுமார் 60 வருடங்களாக குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

இவர்கள் முறைப்படி ஊராட்சி நிர்வாகத்துக்கு வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். இவர்கள் சுமார் 40 வருடங்களாக வீட்டுமனை பட்டா கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வீட்டுமனை பட்டா இல்லாத காரணத்தால் அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் இவர்களால் கட்ட முடியவில்லை. இவர்கள் இன்று வரை குடிசை வீடுகளில் வசித்து வருவதால், மழை காலங்களில் பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்கள், ரேஷன் அட்டைகள் பாழாகி விடும் நிலை உள்ளது.

இந்நிலையில் இப்பகுதி மக்கள் வடதில்லை பகுதியிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக நடந்து சென்று போந்தவாக்கம் சென்று, அங்கிருந்து பஸ்களில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தனர்.

அங்கு மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து விரைவில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் திரும்பி சென்றனர்.

Next Story