மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.48 லட்சம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.48 லட்சம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 July 2019 10:30 PM GMT (Updated: 22 July 2019 5:06 PM GMT)

மீஞ்சூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் ரூ.48 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் பிரளையம்பாக்கம், கோட்டைக்குப்பம், கோரைக்குப்பம், லைட்அவுஸ் குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் உவர்ப்பு தன்மை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் குடிநீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து பொன்னேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்ற மாவட்ட நிர்வாகம் ரூ.48 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு திட்டப்பணிகள் நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்ததையொட்டி தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரம், ராஜேந்திரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இவ்விழாவிற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம்பலராமன் தலைமை தாங்கி ரூ.48 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

இதில், பிரளையம்பாக்கம் கிராமத்தில் ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் குழாய் திட்டத்தையும், ரூ.20 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு திட்ட நிலையம், கோட்டைக்குப்பம், கோரைக்குப்பம், லைட்அவுஸ் குப்பம் ஆகிய ஊராட்சிகளில் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பானுபிரசாத் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story