மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிகேட்டவர்களுக்கு அடி-உதை கைது செய்ய கோரி பஸ்கள் சிறை பிடிப்பு


மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிகேட்டவர்களுக்கு அடி-உதை கைது செய்ய கோரி பஸ்கள் சிறை பிடிப்பு
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 5:17 PM GMT)

பொதட்டூர்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றவர்களை தட்டிக்கேட்ட 2 பேர் தாக்கப்பட்டனர். தாக்கியவர்களை கைது செய்ய கோரி பஸ்களை சிறை பிடித்து மறியல் செய்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் நேற்றுமுன்தினம் மாலை அம்பேத் கர் நகர் காலனி சேர்ந்த 3 பேர் ஒரே மோட்டார்சைக்கிளில் பஜார் தெருவில் மிக வேகமாக சென்றனர். அப்போது பொதட்டூர்பேட்டையை சேர்ந்த கருணா (வயது 23), குணசேகர் (25) ஆகியோர் அவர்களை ஏன் வேகமாக செல்கிறீர்கள்? என்று தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அம்பேத்கர் நகர் காலனியை சேர்ந்த மேலும் சிலர் அவர்களுடன் சேர்ந்து கருணா, குணசேகர் ஆகிய 2 பேர் மீது தாக்குதல் நடத்தியதில் காயம் அடைந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அம்பேத்கர் நகர் காலனியை சேர்ந்த சற்குணம் (35) உள்பட 6 பேர் மீது பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து, சற்குணத்தை கைது செய்தனர். புகாரில் குறிப்பிட்டுள்ள மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த சிலர் நேற்று பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள பஸ்களை சிறை பிடித்து மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

தகவல் கிடைத்ததும், பொதட்டூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ்களை சிறை பிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story