திருச்சி கருமண்டபத்தில் பழக்கடையில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


திருச்சி கருமண்டபத்தில் பழக்கடையில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 July 2019 4:30 AM IST (Updated: 22 July 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி கருமண்டபத்தில் பழக்கடையில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது 37). இவர் திருச்சி கருமண்டபம் மெயின் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் தரைத்தளத்தில் பழக்கடை நடத்தி வருகிறார்.

கடையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் காலை 7 மணிக்கு கடையை திறந்து இரவு 10 மணிக்கு கடையை மூடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு பாரதிதாசன் வீட்டிற்கு சென்றார். ஊழியர்களும் புறப்பட்டு சென்றனர்.

நேற்று காலை 7 மணி அளவில் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பாரதிதாசனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அவர் விரைந்து வந்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்கள் திருடு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடையில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருடு போனதாக கடையின் உரிமையாளர் பாரதிதாசன் போலீசாரிடம் தெரிவித்தார். கடையின் முன்பகுதியில் உள்ள 2 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டபோது அவை திருப்பி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் கடையின் உள் பகுதியில் உள்ள கேமராக்கள் மறைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கடையில் பணத்தை திருடிய மர்மநபர்கள் தங்களது உருவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமல் இருப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் பதியக்கூடிய இடத்தில் உள்ள கணினியையும் மர்மநபர்கள் திருடிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கடையின் உள்ளே காலி மதுபாட்டில்களும் கிடந்தன. இதனால் அவர்கள் கடையின் உள்ளே அமர்ந்து மது குடித்திருக்கலாமா? என போலீசார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கருமண்டபம் பகுதியில் சாலைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

Next Story