ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மெக்கானிக் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மெக்கானிக் தீக்குளிக்க முயன்றார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் மனுக்களை கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை நுழைவு வாயில் பகுதியிலேயே போலீசார் சோதனையிட்டு உள்ளே அனுமதித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மனு கொடுப்பதற்காக உள்ளே சென்றார்.
அவர் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே திடீரென தன்னிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தார். உடனடியாக அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினார்கள்.
அந்த நபரை போலீசார் மீட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை எடுத்து அவருடைய உடலில் ஊற்றினார்கள். பின்னர் அவரை சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் அந்தியூர் தாலுகா அத்தாணி அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்த ராமனின் மகன் வல்லரசு என்கிற பிரகாஷ் (வயது 35) என்பதும், அவர் கடந்த 20 ஆண்டுகளாக அத்தாணி பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்ததும் தெரிய வந்தது. அந்த கடையை 3 மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் கடையை எடுத்த நபர், மெக்கானிக் கடையில் இருந்த பொருட்களை அகற்றியுள்ளார். இதுதொடர்பாக அத்தாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கடையை ஏலம் எடுத்து கொடுப்பதாக கூறி 2 பேர் தன்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும், அந்த கடையை மீண்டும் தனக்கே வழங்குமாறும் கூறி பிரகாஷ், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. பிரகாஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மெக்கானிக் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனு கொடுக்க வந்த அனைத்து பொதுமக்களையும் போலீசார் சோதனையிட்ட பிறகே கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதித்தனர். போலீஸ் பாதுகாப்பையும் மீறி பிரகாஷ் மண்எண்ணெய் கேனை உள்ளே எடுத்து சென்றுள்ளார்.