பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த தறித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த தறித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 July 2019 4:45 AM IST (Updated: 22 July 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த தறிப்பட்டறை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு பெரியவலசு சுக்கிரமணியக்கவுண்டன் வலசு முல்லை நகர் முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் நாகராஜ் (வயது 34). தறிப்பட்டறை தொழிலாளி. இவருக்கும், ஈரோடு அசோகபுரம் ராஜவீதி பகுதியை சேர்ந்த கிட்டுசாமி–ரேணுகா ஆகியோரின் மகள் சீதா என்பவருக்கும் கடந்த 20–8–2004 அன்று திருமணம் நடந்தது. 2 பேரும் தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு யோகேஸ்வரன், சந்துரு, ராகவன் என 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சீதா இன்னொரு வாலிபருடன் பழகியதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 8–11–2016 அன்று நோட்டரி பப்ளிக் முன்னிலையில் 2 பேரும் திருமண முறிவு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி நாகராஜை பிரிந்த சீதா 3 மகன்களையும் அழைத்துக்கொண்டு வந்து அவரது தாயார் ரேணுகாவுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் 8–5–2017 அன்று மாலை 6.30 மணிக்கு சீதாவும், தாயார் ரேணுகாவும் ஈரோடு வீரப்பன்சத்திரம் 16–ம் எண் மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகராஜ் வந்தார். அவர் சீதாவை பார்த்ததும் அருகில் சென்று தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், சீதாவை ஓங்கி மிதித்து தள்ளினார். அவர் தரையில் விழுந்த பிறகும் ஆத்திரம் அடங்காத நாகராஜ் கையில் கொண்டு வந்த கத்தியால் சீதாவை சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த ரேணுகாவுக்கும் கத்திக்குத்து விழுந்து காயம் ஏற்பட்டது. 2 பேரையும் கத்தியால் குத்திய நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். அக்கம் பக்கத்தினர் சீதாவையும், ரேணுகாவையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சீதா ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது. ரேணுகா சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் அடைந்தார்.

இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் ஈரோடு மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சீதாவை குத்தி கொலை செய்த குற்றத்துக்காக நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பொது இடத்தில் தகாத வார்த்தைகள் பேசிய குற்றத்துக்காக 2 மாதம் சிறைத்தண்டனையும், ரேணுகாவை கத்தியால் குத்திய குற்றத்துக்காக 3 மாதம் சிறைத்தண்டனையும் விதித்தார்.

சிறைத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதி மாலதி கூறி உள்ளார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.


Next Story