அவினாசி அருகே தோட்டப்பகுதியில் சாயக்கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிச்சென்ற அவலம்; கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு


அவினாசி அருகே தோட்டப்பகுதியில் சாயக்கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிச்சென்ற அவலம்; கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 6:39 PM GMT)

அவினாசி அருகே தோட்டப்பகுதியில் லாரியில் கொண்டு வந்து சாயக்கழிவுகளை கொட்டிச்சென்றதால் பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் அவினாசி ஒன்றியம் புலிப்பார் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புலிப்பாரில் இருந்து கோபிச்செட்டிப்பாளையம் செல்லும் ரோட்டோரம் சாயக்கழிவுகளை மூடையில் கட்டி லாரியில் கொண்டு வந்து நள்ளிரவில் கொட்டிச்சென்றுள்ளனர். அந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். தோட்டங்கள் சுற்றியிருக்கும் பகுதியில் சாயக்கழிவுகளை மர்ம ஆசாமிகள் கொட்டிச்சென்றுள்ளனர். தற்போது மழை பெய்து வருவதால் சாயக்கழிவுகள் மழைநீரில் கரைந்து பூமிக்கு அடியில் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தோம். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு கழிவுகளை அகற்றுவதாக கூறி சென்றார்கள். ஆனால் இதுவரை சாயக்கழிவுகள் அகற்றாமல் அப்படியே கிடக்கிறது. எனவே இந்த சாயக்கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நள்ளிரவில் லாரி மூலம் சாயக்கழிவுகளை கொட்டும் ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

காங்கேயம் தாலுகா கீரனூர், மரவட்டப்பாளையம், பரஞ்சேர்வழி, அலுகுறிச்சி பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. எங்கள் பகுதியில் தென்னை மட்டையில் இருந்து மஞ்சுவை தனியாக பிரித்தெடுக்கும் தென்னை நார் தொழிற்சாலை அமைக்கும் பணி தனியார் ஒருவர் மூலம் நடந்து வருகிறது.

இவ்வாறு அந்த தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்தால் நிலத்தில் தென்னை நார்களை போட்டு தண்ணீர் ஊற்றி அதில் இருந்து மஞ்சு பிரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அப்படி செய்யும்போது நிலத்தடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொழிற்சாலையை எங்கள் பகுதியில் அமைக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

திருப்பூரை அடுத்த அலகுமலை கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்துக்கு ஆங்கிலேயர் காலத்தில் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள், நிலத்தின் உடமையாளர்களான எங்கள் சமூகத்தினர் நிலத்தை உழுது பயிரிட்டு வாழ முடியாத வகையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அராஜகம் செய்து வருகிறார்கள்.

எங்களுக்குரிய நிலத்தை அவர்களிடம் கேட்டு வந்தோம். இந்தநிலையில் எங்கள் தெருவுக்கு செல்லும் பொது வழிப்பாதையை கம்பி வேலி அமைத்து தடுத்து தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள். எங்கள் நிலங்களை அபகரித்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு எங்களிடம் கொடுப்பதுடன் தீண்டாமை வேலியையும் அகற்றிக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தாராபுரம் தாலுகா கிளாங்குண்டல் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், பெருமாள்பாளையம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சம்பந்தப்பட்ட பூமி மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள தென்னை மரங்கள் ஆகியவற்றுக்கான பொது ஏலம் வருகிற 26-ந் தேதி விட வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக மறைமுகமாக ஏலம் விட்டு சில நபர்கள் பூமியை ஏலம் எடுத்து குத்தகை வரி செலுத்துவதாக தெரிகிறது. எனவே வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சம்பந்தப்பட்ட பூமியை ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலம் விட்டு குத்தகை வரி வசூல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story