தட்டார்மடம் அருகே முதியவர் கொலையில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது


தட்டார்மடம் அருகே முதியவர் கொலையில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 6:44 PM GMT)

தட்டார்மடம் அருகே முதியவர் கொலையில் தலைமறைவாக இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தட்டார்மடம், 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 70). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த 15-3-2018 அன்று பக்கத்து ஊரான சொக்கன்குடியிருப்பில் ஆடு மேய்க்க சென்றபோது, மர்மநபரால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் கூலி தொழிலாளியான சூரிய நாராயணன் (39) என்பவர் மதம் மாறியது தொடர்பாக, அவருக்கும், வேலாயுதத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சூரிய நாராயணன் அரிவாளால் வேலாயுதத்தை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தலைமறைவான சூரிய நாராயணனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தட்டார்மடம் பகுதியில் பதுங்கி இருந்த சூரிய நாராயணனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

முதியவர் கொலை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த தொழிலாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பாராட்டினார்.

Next Story