பாளையங்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பரிதாப சாவு
பாளையங்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது. தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. அவருடைய மனைவி அம்பிகா. இவர்களுடைய மகன் 11 மாத ஆண் குழந்தையான விஷ்வா.
இந்த குழந்தைக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று காலை அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு மாலையில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதனை அறிந்த பாபுவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்ததாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் எஸ்.டி.பி.ஐ., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும் திரண்டு வந்து ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story