சீர்காழி, செம்பனார்கோவில் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்த 3 பேர் கைது


சீர்காழி, செம்பனார்கோவில் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 July 2019 3:45 AM IST (Updated: 23 July 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி, செம்பனார்கோவில் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சீர்காழி,

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவருக்கு சொந்தமான திடல் ஓலையாம்புத்தூரில் உள்ளது. இந்த திடலில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அங்கு அனுமதியின்றி பொக்லின் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் எடுத்தது தெரியவந்தது. உடனே போலீசார் டிராக்டர் மற்றும் பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் கொண்டத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்த செல்வம் மகன் மாதவன் (வயது 22), பொக்லின் டிரைவர் வைத்தீஸ்வரன்கோவில் நடுக்கரைமேட்டு பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பிரகாஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய நிலத்தின் உரிமையாளர் பன்னீர்செல்வம், அவரது மகன் வெற்றிச்செல்வம், ராஜேந்திரன் மகன் பாலாஜி, பொக்லின் எந்திரத்தின் உரிமையாளர் வைத்தீஸ்வரன்கோவில் சுப்பையா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நாகராஜ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

செம்பனார்கோவில் போலீஸ் சரகம் கருவி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக அனுமதியின்றி மணல் எடுத்து வந்த ஒரு சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் சின்ன கிடாரங்கெண்டான் கீழப்பள்ளிக்கொல்லை பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் (37) என்பவரை கைது செய்தனர்.


Next Story