தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 23 July 2019 4:30 AM IST (Updated: 23 July 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரக்கோரி வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அப்போது பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திய பிறகும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வசதி இல்லாததால் நடுநிலைப்பள்ளி கட்டிடத்திலும், மரத்தடியிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே எங்கள் பகுதியில் உள்ள ஒரு மந்தை புறம்போக்கு நிலத்தை நத்தம் இடமாக மாற்றி, அதில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் அன்னமங்கலத்தை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இல்லை. இந்நிலையில் அன்னமங்கலம் தனப்பிரகாசம் நகரில் அல்லது அன்னமங்கலம் கிராமத்தின் தெற்கு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை புதிதாக திறக்க உள்ளதாகவும், அதற்காக கட்டிடப்பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. டாஸ்மாக் கடை இல்லாததால் எங்கள் கிராமத்தில் .பிரச்சினை ஏதுவும் ஏற்படாமல் இருக்கிறது. எனவே எங்கள் கிராமத்தில் அரசு புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 307 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்று கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும் கொடி நாள் வசூலில் கடந்த 2016-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.3 லட்சத்து 44 ஆயிரம் 500 வசூல் செய்தமைக்காக, அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தின் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணிபுரிந்து, தற்போது எறையூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி பணிபுரிந்து வரும் ஜெய்னுலாபுதீனை பாராட்டி தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கத்தை கலெக்டர் சாந்தா, ஜெய்னுலாபுதீனிடம் வழங்கி பாராட்டினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story