மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 July 2019 4:30 AM IST (Updated: 23 July 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீசு கொடுத்துள்ளனர். எனவே மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராம மக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகா‌‌ஷ், சதீ‌‌ஷ் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர்.

அப்போது கலெக்டரிடம் பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 153 குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர்நிலை பகுதி என்று கூறி எங்களது வீடுகளை காலி செய்ய சொல்லி காணை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நோட்டீசு அனுப்பியுள்ளனர். எங்களுக்கு இந்த குடியிருப்புகளை தவிர வேறு இடம் ஏதும் இல்லை. எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்தால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். எனவே நாங்கள் குடியிருக்கும் இடத்திலேயே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், அல்லது எங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதனை கேட்டறிந்த கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story