எழுமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


எழுமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 8:03 PM GMT)

எழுமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 5 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி,

எழுமலை அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் கடந்த சில மாதங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி உலைப்பட்டி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் குடிநீர் வழங்க அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. போதிய குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்கி வந்தனர். மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று குடிநீர் எடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து நேற்று உலைப்பட்டி கிராம மக்கள் காலிகுடங்களுடன் எழுமலை-எம்.கல்லுப்பட்டி சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் செய்தனர். இதனால் அந்த சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக எழுமலை மற்றும் எம்.கல்லுப்பட்டி பகுதிற்கு செல்லும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் மாற்று பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கதிரவன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், இத்துடன் விரைவில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story