மாவட்ட செய்திகள்

மதுரை அருகே பயங்கரம்; வகுப்பறையில் மாணவர்கள் கண்முன் ஆசிரியை படுகொலை + "||" + Near Madurai In the classroom In front of the students eye Kill the teacher

மதுரை அருகே பயங்கரம்; வகுப்பறையில் மாணவர்கள் கண்முன் ஆசிரியை படுகொலை

மதுரை அருகே பயங்கரம்; வகுப்பறையில் மாணவர்கள் கண்முன் ஆசிரியை படுகொலை
வகுப்பறையில் புகுந்து மாணவர்கள் கண்முன் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
திருமங்கலம்,

மதுரை திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. பிற்பகல் 3.30 மணி அளவில் அந்த பள்ளிக்கூடத்துக்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.


பள்ளிக்கூட வளாகத்தில் இருந்து சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், ஹெல்மெட்டை தனது கையில் வைத்துக்கொண்டு வந்தார். அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரதிதேவி (வயது 33) குறித்து காவலாளியிடம் விசாரித்துள்ளார். 3-வது மாடியில் உள்ள 8-வது வகுப்பில் ரதிதேவி சமூக அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்ததை அறிந்த அந்த நபர், நேராக அங்கு சென்றார்.

அந்த வகுப்பறையை அடைந்ததும் நேராக அந்த நபர் உள்ளே சென்றார். அவரை பார்த்ததும் ஆசிரியை ரதிதேவி சற்று அதிர்ச்சி அடைந்தார். ஆசிரியையை நெருங்கிய அவர் தனது கையில் இருந்த ஹெல்மெட்டால் ஓங்கி அவரது தலையில் அடித்துள்ளார். இதில் ரதிதேவி நிலை தடுமாறினார். வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலற தொடங்கினார்கள்.

உடனே அந்த நபர், தனது ஹெல்மெட்டுக்குள் மறைத்து கொண்டு வந்த ‘ஸ்குரு டிரைவர்’ மற்றும் கத்தியை எடுத்தார். இதைப்பார்த்து ரதிதேவி சுதாரிப்பதற்குள், அந்த நபர் வகுப்பறை என்றும் பாராமல் ஈவு இரக்கமற்று கத்தி, ஸ்குரு டிரைவரால் அவரை தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த காட்சிகளை கண்ட மாணவர்களால், வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த நபரை நெருங்க முடியாமல் போனது. ரத்த வெள்ளத்தில் வகுப்பறையிலேயே ரதிதேவி விழுந்தார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து வேகமாக நடந்து பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார். இத்தனை காட்சிகளும் ஒரு சில நிமிடங்களில் அரங்கேற்றிவிட்டன.

பள்ளிக்கூட வளாகமே இந்த பயங்கர சம்பவத்தில் அதிர்ந்து போய் இருந்தது. மற்ற வகுப்பறைகளில் இருந்த ஆசிரிய-ஆசிரியைகள் ஓடிவந்து ரதிதேவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் சற்று நேரத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுபற்றி அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆசிரியை ரதிதேவியின் உடலை பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான பின்னணி குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையிலேயே இந்த பயங்கர சம்பவத்தை அரங்கேற்றியது ரதிதேவியின் கணவர் குருமுனீசுவரன் (36) என தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ராமநாதபுரம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவரான குருமுனீஸ்வரன், சென்னையில் கட்டிட என்ஜினீயராக வேலை செய்து வந்தார். அவருக்கும், ஆசிரியை ரதிதேவிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஹர்சவர்ஷினி, ஹர்சவர்ஷன் ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

கணவர் சென்னையில் வேலை பார்த்ததால் ரதிதேவி ராமநாதபுரத்தில் உள்ள மாமியார், மாமனாருடன் வசித்து வந்தார். இதற்கிடையே ரதிதேவிக்கும், கணவர் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோபித்துக் கொண்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சித்தனேந்தலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவிடுவாராம்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ரதிதேவி கணவரை விட்டு பிரிந்தார். பின்னர் குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கேயே ஒரு பள்ளியில் ஆசிரியையாக அவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான் ரதிதேவி கடந்த மாதம் திருமங்கலத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.

சில தினங்களுக்கு முன்பு குருமுனீஸ்வரன் ராமநாதபுரம் வந்தார். அங்கிருந்து தனது மனைவியை தேடி காரியாபட்டி சென்றார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ரதிதேவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே அன்றைய தினம் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் குருமுனீஸ்வரன் தனது மனைவி வேலை பார்த்துவந்த பள்ளிக்கூடத்துக்கு நேற்று சென்று மாணவர்கள் கண்முன் மனைவி ரதிதேவியை சரமாரியாக தாக்கியதுடன், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இது சம்பந்தமாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடிவந்த நிலையில், குருமுனீஸ்வரன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மற்றும் திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.