அமைச்சரவைக்கு தெரியாமல் வெளியிடப்பட்ட மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் அறிவிப்பு ரத்து - சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடி உத்தரவு


அமைச்சரவைக்கு தெரியாமல் வெளியிடப்பட்ட மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் அறிவிப்பு ரத்து - சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 23 July 2019 5:00 AM IST (Updated: 23 July 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய அமைச்சரவைக்கு தெரியாமல் வெளியிடப்பட்ட அறிவிப்பினை சபாநாயகர் சிவக்கொழுந்து ரத்து செய்து உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் அரசு கொறடா அனந்தராமன் மாநில தேர்தல் ஆணையர் தொடர்பாக பிரச்சினை ஒன்றை எழுப்பினார். அதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

அனந்தராமன் (காங்கிரஸ்):- கடந்த 8.7.2019 அன்று உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்வது எப்படி என்பது தொடர்பாக 1994-ல் விதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் அமைச்சருக்கு தெரியாமல், அரசிதழில் வெளியிடப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் யார் தலையிடுவது? விதிகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

சிவா (தி.மு.க.):- யாரையோ மனதில் வைத்துக்கொண்டு இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளனர்.

எம்.என்.ஆர்.பாலன் (காங்):- இதுதொடர்பாக இந்த சபையில் விவாதிக்க வேண்டும்.

அன்பழகன் (அ.தி.மு.க.):- மாநில தேர்தல் ஆணையர் பதவி என்பது நியமன பதவி. அதற்கு எதற்கு வெளிப்படையாக அறிவிப்பு கொடுக்கவேண்டும்? இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளதா?

அமைச்சர் நமச்சிவாயம்:- உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க விதிப்படி முதல்-அமைச்சர் வழியாக ஒரு வருடத்துக்கு முன்பு கோப்பு அனுப்பப்பட்டது. அந்த முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டது. அதற்கு ஒரு வருடமாக கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் திடீரென்று பத்திரிகைகளில் விளம்பரம் வந்துள்ளது.

இதுதொடர்பாக என்னையோ, முதல்-அமைச்சரையோ யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை. யாருடைய ஒப்புதலும் இல்லாமல் கவர்னர் ஒரு நிபந்தனை விதித்து அதற்கான கோப்பு எங்களின் கவனத்துக்கு வராமல் பத்திரிகைகளில் விளம்பரம் வந்துள்ளது. இதற்கான உத்தரவினை கவர்னர் நேரடியாக பிறப்பித்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. கவர்னர் தனியாக முடிவு எடுத்து அறிவித்து இருப்பது முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்களின் உரிமைகளை பறிக்கும் செயல். சட்டத்தை மீறி தனி ஒருவர் சட்டம்போட்டால் சட்டமன்றம் எதற்கு? அமைச்சர்கள் எதற்கு?

இதுதொடர்பாக சபாநாயகர் கோப்புகளை வரவழைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசின் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளாட்சி துறை என்பதே தன்னாட்சி அதிகாரம் பெற்றது. அதில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

ஜெயமூர்த்தி (காங்):- சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம்தான். அதற்கான அதிகாரத்தை பறிப்பவர் யார்?

(அதைத்தொடர்ந்து கவர்னர் தொடர்பாக விமர்சித்து சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சாமிநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த கருத்துகளை சபைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கினார்.)

அனந்தராமன்:- அமைச்சரவைக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு கூறி உள்ளது. இதை மீறுவது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாவது போன்றது. அதை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

என்.என்.ஆர்.பாலன்:- இந்த அறிவிப்பில் உள்நோக்கம் உள்ளது.

பாஸ்கர் (அ.தி.மு.க.):- அதிகாரம் தொடர்பாக கவர்னரின் மனுவினை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இந்தநிலையில் இந்த கோப்பினை தயார் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள். அந்த அதிகாரி இனி பணியில் இருக்கக்கூடாது.

அன்பழகன்: கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசுதான்.

சாமிநாதன் (பா.ஜனதா):- உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மத்திய அரசு உரிய நிதி தரும்.

அமைச்சர் நமச்சிவாயம்:- இது தவறான கருத்து. புதுவை மத்திய நிதிக்குழுவில் உறுப்பினராக இல்லை. எனவே உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும் நமக்கு நிதி வராது. கடந்த காலங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி மத்திய அரசிடம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.574 கோடி நிதி கேட்டோம். ஆனால் புதுவை மாநிலம் நிதிக்குழுவில் இல்லாததால் நிதி தரமுடியாது என்று கூறிவிட்டனர். அதே விதிமுறைதான் இப்போதும் உள்ளது. நிதிக்குழுவில் நாம் இன்னும் சேர்க்கப்படவில்லை. நிதிக் குழுவில் சேர்த்தால்தான் நமக்கு நிதி தருவார்கள். இருந்தாலும் அதிகார பகிர்வுக்காகத்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்துகிறோம்.

அன்பழகன்:- மாநில தேர்தல் ஆணையர் தொடர்பான அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கான அறிவிப்பு எனக்கும் அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருந்தது. மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க நானும் அமைச்சர்களும் அமைச்சரவையில் முடிவு செய்து கடந்த 25.5.2018 அன்று கவர்னருக்கு பரிந்துரை கோப்பு அனுப்பினோம். ஏனெனில் மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

ஆனால் நாங்கள் பரிந்துரை செய்த பாலகிருஷ்ணன் என்பவரை ஏற்கமுடியாது என்று 1.7.2019 அன்று தெரிவித்தனர். ஆணையரை வெளியில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்றனர். இப்போது உள்நோக்கத்தோடு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விதி முறைகளை உருவாக்குவது சட்டமன்றம்தான். அதை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது.

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மாநில அரசின் பரிந்துரைப்படிதான் கவர்னர் செயல்பட வேண்டும். ஆனால் மாநில தேர்தல் ஆணையர் தொடர்பான கோப்பு கவர்னர், தலைமை செயலாளர், துறை செயலாளர் இடையே மாறிமாறி சென்று வருகிறது. ஆனால் எங்களிடம் வரவில்லை. அதிகாரத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. அதற்காகத்தான் கோர்ட்டுவரை சென்று வந்துள்ளோம். இப்போது விதிமுறைகளை மீறியது யார்? அதிகார துஷ்பிரயோகம் செய்தது யார்? அதுதொடர்பான கோப்பினை வாங்கி பாருங்கள். எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

சபாநாயகர் சிவக்கொழுந்து:- உள்ளாட்சித்துறை குறித்து மன்றத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினை தொடர்பான கோப்பினை தலைமை செயலாளர், செயலாளர், துறை இயக்குனர், அமைச்சர் மூலமாக அலுவலக நேரம் முடிவதற்குள் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பான விளம்பரம் குறித்து முதல்-அமைச்சர், அமைச்சர் தங்களுக்கு எதுவும் தெரியாது என்கின்றனர்.

அமைச்சரவைக்கு தெரியாமல் இதை எப்படி செய்தார்கள்? அமைச்சர்களுக்கு தெரியாமல், சட்டத்துறை ஒப்புதல் பெறாமல் சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனிநபரோ, அவரை சார்ந்த குழுவோ ஒன்றை கையில் எடுக்க முடியாது. சட்டம் என்பது மக்களுக்காக சட்டமன்றத்தால் உருவாக்கப்படுகிறது. இயற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் உள்ளதா? என்பதை பார்க்கும் நடைமுறையும் உள்ளது.

அமைச்சரவைக்கு தெரியாமல், அரசிதழில் வெளியிடப்படாமல் வந்துள்ள 8.7.2019 தேதியிட்ட விளம்பர அறிவிப்பினை ரத்து செய்கிறேன். விதிமுறைகளை மீற காரணமான அதிகாரிகள் மீது அமைச்சரிடம் பேசி தக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story