முக்கடல் பகுதியில் தொழிற்சாலை அமைக்கக் கூடாது மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு


முக்கடல் பகுதியில் தொழிற்சாலை அமைக்கக் கூடாது மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 8:32 PM GMT)

முக்கடல் பகுதியில் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பச்சை தமிழகம் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மொத்தம் பொதுமக்கள் சார்பில் 447 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல் காசிம் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொழிற்சாலை

மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாளில், பச்சை தமிழகம் கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முக்கடல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பூதப்பாண்டி அருகே முக்கடல் பகுதியில் ஒரு கிரசர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்குள்ள வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மண், கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர் குறைந்து விடும். மேலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும்.

கிரசர் தொழிற்சாலை செயல்படுமானால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே கனிமவள கொள்ளையில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, கிரசர் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சுடுகாட்டில் குப்பைகள்

விஸ்வகர்மா சமுதாயத்தினர் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் விஸ்வகர்மா சமுதாயத்தினர் 9 மற்றும் 14-வது வார்டில் வசித்து வருகின்றனர். இந்த சமுதாயத்துக்கு சொந்தமான சுடுகாடு திருவிதாங்கோடு அமராவதி குளக்கரையில் உள்ளது.

தற்போது இந்த சுடுகாட்டில் பேரூராட்சி பகுதியின் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளது. இந்த குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். மேலும் சுடுகாட்டில் மின்சாரம், தண்ணீர் வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தது.

உரக்கிடங்கை மாற்ற வேண்டும்

அகில இந்திய மக்கள்நல கழகத்தின் மாநில தலைவர் சிவகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி மற்றும் ஏராளமானோர் கொடுத்த மனுவில், நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் உரக்கிடங்கு உள்ளது. இந்த உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆதிவாசி இளைஞர் விடுதலை இயக்கம் குமரி மாவட்ட கிளை சார்பில் நிறுவன தலைவர் முருகன், பொது செயலாளர் முத்துகுமார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

வன உரிமை சட்டம் 2006-ன் படி அனைத்து பழங்குடியின கிராமங்களிலும் கலெக்டர் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். அதில் பழங்குடியின மக்களுக்கு நில உரிமை, வன உரிமை மற்றும் சமூக உரிமை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சிப்பாறை பேரூராட்சிக்கு உட்பட்ட பழங்குடியின கிராமத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல மாவட்டத்தின் மற்ற பழங்குடியின கிராமங்களிலும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பட்டா கேட்டு...

நேசர்புரம் காட்டுவிளை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயசேகர் என்பவர் நேற்று கலெக்டரிடம் கொடுத்த மனுவில், விளவங்கோடு வட்டம் நட்டாலம் கிராமத்தில் 1,200 சென்ட் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க இயலும் என விளவங்கோடு தாசில்தார் அலுவலகம் வாயிலாக கடிதம் பெறப்பட்டுள்ளது. எனவே ஏழைகளுக்கு சொந்தமாக வீடு கட்ட அரசால் வழங்கப்படும் நிலத்தை, இந்த நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story