பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 215 நுண்பார்வையாளர்கள் நியமனம் கலெக்டர் சண்முகசுந்தரம் பேட்டி


பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 215 நுண்பார்வையாளர்கள் நியமனம் கலெக்டர் சண்முகசுந்தரம் பேட்டி
x
தினத்தந்தி 22 July 2019 10:15 PM GMT (Updated: 22 July 2019 8:39 PM GMT)

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காணப்படும் 179 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 215 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர்,

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை செய்யப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 105 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 95 பேர் இறப்பு காரணமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக 5,564 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 715 வாக்குச்சாவடி மையங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில், 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 215 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளில் 7,552 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். அவர்களுக்கு, முதல் நிலை பயிற்சி முடிக்கப்பட்டு, 2, 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் 1,919 கட்டுப்பாட்டுக் கருவி, 3,853 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்று உறுதி செய்யும் 2,099 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

வேலூர் மாவட்டம் முழுவதும் 75 பறக்கும்படைகள், 39 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் முறையாக பணியாற்றுகிறார்களா? என்று ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 48 புகார்கள் வந்துள்ளன. அதில், 22 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் 1,034 போலீசார் தங்கள் வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்ய உள்ளனர். இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையில் பணியாற்றும் 6,038 பேர் தங்கள் வாக்குகளை இ.டி.பி.பி.எஸ். என்ற எலக்ட்ரானிக்கல் டிரான்ஸ்மிட்டன் போஸ்டல் பேலட் சிஸ்டம் மூலம் செலுத்த உள்ளனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு வரும் நட்சத்திர பேச்சாளர்கள், வெளியூர் பிரமுகர்களை கண்காணிக்க பறக்கும்படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தேர்தல் தாசில்தார் விஜயகுமார், அலுவலக மேலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்த கூட்டம் தேர்தல் பொதுப்பார்வையாளர் சுதம்பண்டரிநாத்சுதே முன்னிலையில் நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம், வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story