அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதியாகி விட்டது தர்மபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதியாகி விட்டது என்று தர்மபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மதிகோன்பாளையம் முதல் நாயக்கன்கொட்டாய் வரை உள்ள 2 வழிசாலை ரூ.25 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ. தூரத்திற்கு 4 வழி சாலையாக மாற்றப்படுகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா மதிகோன்பாளையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் நடராஜன், லோகநாதன், உதவி கோட்ட பொறியாளர்கள் குலோத்துங்கன், ஜெயக்குமார், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூக்கடை முனுசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சிவப்பிரகாசம், ஜோதிபழனிசாமி, மாதேஷ், தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க.வின் வெற்றி முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சியினர் மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர்.
தற்போது அது மக்களுக்கு புரிந்து விட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்று கூறினார்.
Related Tags :
Next Story