ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வாலிபர் கைது
தாதரில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை தாதர் மேற்கு ரானடே சாலையில் கோ-ஆபரேடிவ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த மாதம் இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்த 2 வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி உள்ளனர்.
இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், இதுபற்றி தாதர் சிவாஜிபார்க் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்தநிலையில், டோங்கிரியில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியதாக அப்பகுதி போலீசார் கேரளாவை சேர்ந்த அகமது ரெகுமான்(வயது26) என்பவரை கைது செய்திருந்தனர். சிவாஜிபார்க் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தான் தாதரில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்திலும் ஸ்கிம்மர் கருவி பொருத்தி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிவாஜி பார்க் போலீசார் ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அகமது ரெகுமானை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
மேலும் தலைமறைவான அவரது நண்பர் அப்துல் மெகமது என்பவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story