போலி தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து ரூ.2 கோடி மோசடி : தம்பதி உள்பட 6 பேர் கைது


போலி தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து ரூ.2 கோடி மோசடி  : தம்பதி உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 23 July 2019 3:37 AM IST (Updated: 23 July 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

போலி தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பிரசாந்த் மற்றும் அவரது மனைவி நித்து ஆகியோர் அதிகளவில் தங்க நகைகளை அடகு வைத்து இருந்தனர். குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அவர்கள் நகையை மீட்காததால் வங்கி நிர்வாகம் அதை ஏலத்தில் விட்டது.

இந்தநிலையில் ஏலம் எடுத்தவர் அந்த நகைகளை உருக்கிய போது, அது போலி தங்கநகைகள் என்பது தெரியவந்தது. அவர் இதுகுறித்து வங்கியில் புகார் அளித்தார்.

வங்கி அதிகாரிகள் போலி நகையை அடகு வைத்த தம்பதி மீது போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர்.

அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட தம்பதியிடம் ரமேஷ், தினேஷ், பிமால் மற்றும் அனில் என்ற 4 பேர் போலி தங்க நகைகளை தயாரித்து கொடுத்து உள்ளனர். அவர்கள் அந்த நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணத்தை 4 பேர் கும்பலிடம் கொடுத்து உள்ளனர்.

நகைகளை அடகு வைக்க அவர்கள் தம்பதிக்கு 1 சதவீதம் கமிஷன் கொடுத்து உள்ளனர். அவர்கள் தம்பதி மூலம் மும்பையில் உள்ள தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேஷ், தினேஷ், பிமால் மற்றும் அனிலை கைது செய்தனர். இதில் ரமேஷ், தினேஷ், பிமால் ஆகிய 3 பேரும் அண்ணன், தம்பிகள் ஆவர்.

Next Story