பட்டிவீரன்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள், மாணவிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு


பட்டிவீரன்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள், மாணவிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 July 2019 11:30 PM GMT (Updated: 22 July 2019 11:27 PM GMT)

பட்டிவீரன்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள், மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள கதிர்நாயக்கன்பட்டி பிரிவில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்த கடை சித்தரேவில் இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக இந்த கடை அங்கிருந்து கதிர்நாயக்கன்பட்டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த கடை கதிர்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தின் அருகாமையில் உள்ளது.

இந்தநிலையில் கதிர்நாயக்கன்பட்டி பிரிவுக்கு டாஸ்மாக் கடை மாற்றப்பட்டதற்கு அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த கடை மெயின் ரோட்டில் அமைந்துள்ளதால் மது அருந்தி விட்டு வரும் போதை ஆசாமிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சுதந்திரமாக சென்று வர முடியவில்லை.

இந்தநிலையில் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கதிர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவிகள் திரண்டு வந்து அய்யம்பாளையம்-தாண்டிக்குடி ரோட்டில் கதிர்நாயக்கன்பட்டி பிரிவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இந்த சாலைமறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அய்யம்பாளையம் வழியாக தாண்டிக்குடி, திண்டுக்கல் செல்லும் வாகனங்களும், மறுமார்க்கத்தில் சித்தையன்கோட்டை வழியாக வத்தலக்குண்டு செல்லும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு போலீசார் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story