நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலி : விதானசவுதாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலியாக விதானசவுதாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை தொடர்ந்து, கடந்த 18-ந் தேதி அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். ஆனால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை (அதாவது நேற்று) கண்டிப்பாக நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதற்கு கூட்டணி கட்சியினரும் சம்மதித்தார். ஆனால் நேற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதில் இழுபறி உண்டானது. இதையடுத்து, நேற்று மாலையில் சட்டசபையில் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பு திட்ட மிட்டபடி நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இதனால் விதானசவுதாவில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து, மாநில போலீஸ் டி.ஜி.பி.நீலமணி ராஜு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலோக்குமார் விதானசவுதாவுக்கு விரைந்து வந்தனர்.
முன்எச்சரிக்கையாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் ஆலோசித்தார். மேலும் விதானசவுதாவுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story