கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு; சபாநாயகர் ரமேஷ் குமார் திட்டவட்ட அறிவிப்பு


கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு; சபாநாயகர் ரமேஷ் குமார் திட்டவட்ட அறிவிப்பு
x
தினத்தந்தி 23 July 2019 5:51 AM IST (Updated: 23 July 2019 5:51 AM IST)
t-max-icont-min-icon

குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டசபையில் இன்று (செவ்வாக்கிழமை) மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் திட்ட வட்டமாக அறிவித்தார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் கணேஷ் பேசினார். அப்போது ஜனதாதளம் (எஸ்) உறுப்பினர் சிவலிங்கேகவுடா எழுந்து, இந்த விவாதத்தில் பேச அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டார்.

அதற்கு சபாநாயகர், இன்று (அதாவது நேற்று) வாக்கெடுப்பு நடத்த வேண்டியுள்ளது. அதனால் விவாதத்தை விரைவாக முடிக்க வேண்டியுள்ளது என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களின் இருக்கையில் இருந்து எழுந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி கூச்சலிட்டனர். அமைதி காக்கும்படி சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து சபையை 10 நிமிடங்கள் சபாநாயகர் ஒத்திவைத்தார். உணவு இடைவேளைக்கு பிறகு குமாரசாமி சபைக்கு வரவில்லை. அதன் பிறகு சபாநாயகரை நேரில் சந்தித்து பேசிய குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்னும் 2 நாட்கள் காலஅவகாசம் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும், இதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சபையை ஒத்திவைத்த பிறகு சபாநாயகரை அவரது அலுவலகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) மற்றும் பா.ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்கள் இன்னும் பேச வேண்டி இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர். பா.ஜனதா தலைவர்கள், எக்காரணம் கொண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்கக்கூடாது என்றும், இன்றே (நேற்று) வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதன் பிறகு சபை 2 மணி நேரத்திற்கு பிறகு இரவு 8.45 மணிக்கு கூடியது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, “கடந்த வெள்ளிக் கிழமை, நம்பிக்கை வாக் கெடுப்பை 22-ந் தேதி (நேற்று) நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. நீங்கள் இதை ஒப்புக்கொண்டீர்கள். சித்தராமையாவும் ஏற்றுக்கொண்டார். அதனால் இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி வரை ஆனாலும் நாங்கள் இருக்க தயார். வாக்கெடுப்பை நடத்துங்கள்” என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கையில் எழுந்து நின்று மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘வேண்டும், வேண்டும் நீதி வேண்டும்‘, ‘அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும்‘ என்று கூறி கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இருக்கையில் அமரும்படி சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை அவர்கள் நிராகரித்துவிட்டனர். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு காங்கிரஸ் உறுப்பினர் எச்.கே.பட்டீல், “எக்காரணம் கொண்டும், இன்று (நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. அதனால் இந்த வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர் மாதுசாமி பேசும்போது, “கவர்னர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு பற்றி தரம் தாழ்ந்து பேசுவது சரியல்ல. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இதை ஒத்திவைக்கக்கூடாது” என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய முதல்-மந்திரி குமாரசாமி, “சபாநாயகரை நம்புவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் உங்களை நம்பாமல் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் இருக்கிறார்கள். நான் ராஜினாமா கடிதத்தை தயார் செய்து வைத்துள்ளதாக சிலர் போலி கடிதத்தை தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர். கர்நாடகத்தில் மிக மோசமான அரசியல் நடக்கிறது” என்றார்.

இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு திட்டமிட்டப்படி இன்று (நேற்று) நடைபெறாவிட்டால் ராஜினாமா செய்வேன் என்று சபாநாயகர், ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சித்தராமையா அவரை நேரில் சந்தித்து, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், “ஒரு நாள் இந்த வாக்கெடுப்பை தள்ளிவைக்க வேண்டும். இன்னும் சபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா, குமாரசாமி பேச இருக்கிறார்கள். அதன் பிறகு வாக்கெடுப்பை நடத்த வேண்டும். ஒரு நாள் ஒத்திவைப்பதால் எதுவும் நடந்துவிடப்போவது இல்லை“ என்றார்.

நேற்று இரவு 10.45 மணியளவில், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று, சபையை நாளைக்கு (இன்று) ஒத்திவைக்குமாறு கோரி கூச்சலிட்டனர். இதனால் சபையில் மீண்டும் அமளி உண்டானது. இருக்கையில் அமரும்படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் தொடர்ந்து கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள், இரவு உணவுக்கு இடைவேளை விட வேண்டும் என்றும், சபையை நாளைக்கு (இன்று) ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதற்கு பா.ஜனதா பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே சபாநாயகர் ரமேஷ்குமார், நேரம் அதிகரித்து கொண்டே செல்வதால், நாளை (அதாவது இன்று) சட்டசபையில் எத்தனை உறுப்பினர்கள் பேசுவீர்கள்?, எத்தனை மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற விவரத்தை சித்தராமையா உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சித்தராமையா, நாளை (இன்று) இரவு 8 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

ஆனால் இதற்கு பா.ஜனதா கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், நாளை (இன்று) மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்று திட்டவட்டமாக கூறியதுடன், சபையை ஒத்திவைத்துவிட்டு இரவு 11.40 மணிக்கு இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிட்டார்.

ஆனால் சபாநாயகர் அறிவிப்பை பா.ஜனதாவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் சபாநாயகர் அறிவித்ததன் மூலம் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் பேசுகிறார்கள். அவர்கள் பேசி முடித்த பிறகு மாலை 5 மணி முதல் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட உள்ளது.

சபையில் பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களின் இருக்கையில் அமர்ந்தபடி மவுனமாக இருந்தனர். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி உறுப்பினர்கள், பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர். பா.ஜனதாவை பற்றி எவ்வளவோ குறை கூறி பேசினாலும், அக்கட்சி உறுப்பினர்கள் மவுனமாகவே இருந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடையும் வரை ஆளுங்கட்சிகளின் உறுப்பினர்கள் என்ன பேசினாலும், அதற்கு யாரும் பதிலளிக்கக்கூடாது என்று எடியூரப்பா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story