திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.387 கோடியில் புதிய கதவணை அமைக்கும் பணி தீவிரம் பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு


திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.387 கோடியில் புதிய கதவணை அமைக்கும் பணி தீவிரம் பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2019 11:00 PM GMT (Updated: 23 July 2019 6:36 PM GMT)

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.387 கோடியில் புதிய கதவணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.

திருச்சி,

கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகி ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடையும் காவிரி திருச்சி முக்கொம்பு வரை அகன்ற காவிரியாக பிரவாகம் எடுத்து வருகிறது. முக்கொம்பு மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாக பிரிந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவும் ஜீவ நதியாகவும் உள்ளது.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இரவு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த அணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அணையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 24-ந்தேதி முக்கொம்புக்கு நேரடியாக வந்து பார்வையிட்டார்.

மேலணையில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் ரூ.38 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் சரி செய்யப்பட்டு பலப்படுத்தப்படும் என்றும், உடைப்பு ஏற்பட்ட அணையில் இருந்து 75 மீட்டர் தொலைவில் புதிய கதவணை ரூ.387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படும் எனவும் அறிவித்தார். முதல்-அமைச்சர் அறிவிப்பினை தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கின.

புதிய கதவணையானது 484 தூண்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்கியது.

484 தூண்களில் 71 தூண்களை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்த தூண்கள் ஒவ்வொன்றும் 15 முதல் 18 மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த தூண்களில் தண்ணீரினால் அரிப்பு ஏற்படாமல் இருக்க ‘எப்பாக்சி’ என்ற தொழில் நுட்பத்தில் பணிகள் நடந்து வருகின்றன.

புதிய கதவணையின் மொத்த நீளம் 630 மீட்டர் ஆகும். அணையின் மேல் பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படும். கட்டுமான பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 2021-ம்ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும். காவிரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டாலும் கட்டுமான பணிக்கு பாதிப்பு ஏற்படாது.

பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நேற்று புதிய கதவணை கட்டுமான பணிகளையும், பழைய மேலணையை பலப்படுத்தும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு, பொதுப்பணித்துறையின் ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட தலைமை பொறியாளர் என்.ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறி யாளர் ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெயராமன், சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story