ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வந்தது
x
தினத்தந்தி 24 July 2019 4:45 AM IST (Updated: 24 July 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று 8,000 கனஅடியாக அதிகரித்தது. மேலும் கர்நாடகாவில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வந்தது.

பென்னாகரம்,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 8,100 கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகளில் கணிசமானோர் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை சேலம் மாவட்ட எல்லையான அடிபாலாற்றில் நுங்கும்நுரையுமாக வெள்ளமென ஆர்ப்பரித்து காவிரி நீர் வந்தது. இதன்பின்னர் நேற்று காலை 7 மணிக்கு மேட்டூர் அணையை காவிரி நீர் வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது படிப்படியாக அதிகரித்து மாலை 3 மணி அளவில் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. இரவில் மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கர்நாடகத்தில் மழை மேலும் தீவிரம் அடைந்தால், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. நீர்வரத்தின் ாரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரத்தொடங்கி உள்ளது. நேற்று காலை 39.13 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலை 6 மணி நிலவரப்படி 39.30 அடியாக உயர்ந்துள்ளது.

Next Story