கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணினி திருட்டு
கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணினி திருடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லை தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் தினேஷ் (வயது 40). நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற இவரது உறவினர் பியூஷ் (22) செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து கடை உரிமையாளர் தினேசுக்கு அவர் தகவல் தெரிவித்தார். கடைக்கு தினேஷ் நேரில் வந்து பார்த்தார். கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 26 செல்போன்கள், ஒரு மடிக்கணினி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் மாவட்ட கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் வெளியேயும், உள்ளேயும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை கொண்டும், செல்போன்களில் உள்ள குறியீட்டு எண்களை கொண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அதே பகுதியில் மற்றொரு செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்திருப்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.