ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர்-அரசியல் கட்சியினர் பிரமாண்ட பேரணி


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர்-அரசியல் கட்சியினர் பிரமாண்ட பேரணி
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் விவசாய சங்கத்தினர், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.

நாகப்பட்டினம்,

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கரியாப்பட்டினம் வரை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் காவிரி படுகையை தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரி படுகையையும், கடற்கரையையும் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்திடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நாகையில் நேற்று நடந்தது.

நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் இருந்து தொடங்கிய பேரணி நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு, காடம்பாடி, பால்பண்ணைச்சேரி வழியாக கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் சென்றனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக 40-க்கும் மேற்பட்டோர் உள்ளே சென்றனர்.

அப்போது கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தன்னிடம் மனு அளிக்குமாறு கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பேரணியில் தி.மு.க., மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பழனியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, நாகை மாலி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க கவுரவ தலைவர் சேரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விவசாய சங்கத்தினர், காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பு குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story