ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது - சட்டசபையில் தீர்மானம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது - சட்டசபையில் தீர்மானம்
x
தினத்தந்தி 24 July 2019 5:00 AM IST (Updated: 24 July 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு:-

சங்கர்(பா.ஜ.க.):-

புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி கூற வேண்டும். திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் திட்டத்தை நாங்கள் எதிர்க்க தயாராக இருக்கிறோம்.

தனவேலு(காங்):- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பாகூர் பகுதியில் 24 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பாகூர் பகுதி புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்து விடும். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

சாமிநாதன்(பா.ஜ.க.):- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்க கூடாது.

பாலன்(காங்):- புதுவை மாநிலத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லை. அந்த திட்டத்தை கொண்டு வந்தால் புதுவையில் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் சின்னாபின்னமாகி விடும். தற்போது இருப்பதே குறைவான விளைநிலங்கள் தான். அதுவும் இல்லாமல் போய் விடும். நிலத்தடி நீர்மட்டம் மேலும் கீழே போய் விடும்.

விஜயவேணி(காங்):-

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும். பாகூர் பகுதி புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள பெரிய ஏரி வறண்டு போய் காணப்படுகிறது. புதுவையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

சந்திரபிரியங்கா (என்.ஆர்.காங்):- மத்திய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதித்துள்ளது. இதனால் எனது தொகுதி பெரிய அளவில் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதே போல் எனது தொகுதியில் பல பெரிய ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.

கீதா ஆனந்தன்(தி.மு.க.):- ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காரைக்கால் பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் நச்சு தன்மை கொண்ட தண்ணீர், காற்று வெளியேறும். கதிர்வீச்சுகள் அதிகம் இருக்கும். இதன் மூலம் கேன்சர் நோய் தாக்கும் அபாயம் உள்ளது என வல்லுனர்கள் கூறியுள்ளனர். மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

வெங்கடேசன்(தி.மு.க.):- புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

ஜெயமூர்த்தி(காங்):-மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் புதுவையில் மோசமான விளைவுகள் ஏற்படும். மக்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத சூழ்நிலை உருவாகும். எனவே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாம் போராட்டம் நடத்த வேண்டும்.

அனந்தராமன்(காங்):- புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். புதுவை சிறிய மாநிலம். இங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். மக்கள் வாழ்வதற்கு தேவையான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எனவே இந்த திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பகுதியில் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சட்டமன்ற கூட்டம் நடந்து வந்தபோது அமைச்சர் கமலக்கண்ணன் பிரச்சினை எழுப்பினார். அப்போது புதுவையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மாநில அரசு அனுமதிக்காது என்று தெளிவாக கூறி இருந்தேன்.

ஆனால் தற்போது அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அனுமதி கோரி நமக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கோப்பை நான் அமைச்சர் கந்த சாமிக்கு அனுப்பி வைத்தேன். அவர் அதை பார்த்து விட்டு புதுவையில் எங்கள் அரசு அனுமதி வழங்காது என்று என்னிடம் திருப்பி அனுப்பினார். அதனை வைத்து நான் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

புதுவை மாநிலம் சிறிய பகுதி. இங்கு பேசும் உறுப்பினர்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேட்கின்றனர். அதனை நான் எனது தீர்மானத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நீர்மட்டம் கீழே சென்று விடும். தண்ணீர் மாசு ஏற்படும். காற்றில் நச்சு தன்மை கலக்கும். ஒட்டு மொத்தமாக பாதிப்பு ஏற்படும்.

எனவே புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பிரதமருக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் கடிதம் எழுதினேன். பெட்ரோலிய துறை மந்திரி இதனை பரிசீலனை செய்வதாக எனக்கு பதில் அனுப்பியுள்ளார். மக்களின் வாழ்வாதாரம் தான் முக்கியம். பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். மாசுபடாத காற்று பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். திட்டத்தால் பாறைகள் உடையும். பூகம்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் சிவக்கொழுந்து குரல் வாக்கெடுப்பு நடத்த அனுமதித்தார். இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story