திருமணிமுத்தாறு-காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இருசக்கர வாகன பிரசாரம்


திருமணிமுத்தாறு-காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இருசக்கர வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருமணிமுத்தாறு-காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.

நாமக்கல்,

வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை செத்தமலை வழியாக கால்வாய் வெட்டி திருமணிமுத்தாற்றில் விட வேண்டும். இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறைந்து வரும் விவசாய நிலப்பரப்பை அதிகரிக்கவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கிடவும் திருமணிமுத்தாறு - காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி நேற்று எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி நினைவாக நடைபெற்ற இந்த இருசக்கர வாகன பிரசாரம் எலச்சிபாளையத்தில் தொடங்கி மாணிக்கம்பாளையம், கட்டிபாளையம், வேல கவுண்டம்பட்டி, எர்ணாபுரம் வழியாக கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

நிதி ஒதுக்கீடு

இந்த பிரசார பயணத்திற்கு எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கசாமி பிரசாரத்தை முடித்து வைத்து பேசினார்.

இந்த பிரசார பயணத்தின் போது கடந்த 2013-ம் ஆண்டில் திருமணிமுத்தாறு திட்டத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த ரூ.1,134 கோடி நிதியை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் ஒன்றியகுழு உறுப்பினர் குப்புசாமி நன்றி கூறினார். 

Next Story