மாவட்டத்தில் மாணவர்கள் யாரும் இல்லாத 2 தொடக்கப்பள்ளிகள்


மாவட்டத்தில் மாணவர்கள் யாரும் இல்லாத 2 தொடக்கப்பள்ளிகள்
x
தினத்தந்தி 24 July 2019 4:00 AM IST (Updated: 24 July 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லை. எனவே அங்கு பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களை தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள பொன்னேரிப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லை.

இந்த நிலையில் இந்த பள்ளியில் 2018-2019-ம் கல்வி ஆண்டில் இரு மாணவர்கள் மட்டுமே படித்தனர். அவர்களும், 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்புக்கு அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து விட்டனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பிரேமகுமாரி என்பவர் பணியில் உள்ளார்.

வகுப்பறைகள் மூடல்

இந்த ஆண்டில் இதுவரை மாணவ, மாணவிகள் யாரும் இப்பள்ளியில் சேரவில்லை. எனவே கடந்த ஆண்டு வரை இங்கு ஆசிரியையாக பணியாற்றி வந்தவரை காளிப்பாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டு விட்டார். தற்போது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாததால் வகுப்பறைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. காலை 9 மணிக்கு வரும் தலைமை ஆசிரியை வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, மாலை 4 மணி வரை இருந்து புத்தகங்களை படித்து விட்டு செல்கிறார்.

இதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தும்பல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் யாரும் சேரவில்லை. இங்கும் தலைமை ஆசிரியர் மட்டும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு செல்கிறார்.

நடவடிக்கை

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. ஆனால் 2 தொடக்கப்பள்ளிகளில் மட்டும் இந்த ஆண்டு மாணவர்கள் யாரும் சேரவில்லை.

எனவே அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அதே ஒன்றியத்தில் தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு தற்காலிகமாக அனுப்ப முடிவு செய்து உள்ளோம். இதற்கான அனுமதியை கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரி உள்ளோம். மேலும் இப்பள்ளிகள் தொடர்பாக பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அங்கிருந்து வரும் உத்தரவு அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story