பரிசுப்பொருள், வரதட்சணை வாங்கக்கூடாது என போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பிய டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு
பரிசுப்பொருள், வரதட்சணை வாங்கக்கூடாது என போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பிய டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது.
மதுரை,
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த தென்னரசு, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். இவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்ததை காரணம் காட்டி, பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘குற்ற வழக்கில் தொடர்புள்ளவருக்கு பதவி உயர்வு வழங்குமாறு பரிந்துரைக்க முடியாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் பூங்கொத்துகள், பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறக்கூடாது என்பதை உறுதி செய்ய டி.ஜி.பி. 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.
இந்தநிலையில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு அரசு வக்கீல் நேற்று ஆஜராகி, போலீஸ் அதிகாரிகள் பரிசுப்பொருட்கள், பூங்கொத்து மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் எனத் தெரிவித்தார். பின்னர் அந்த சுற்றறிக்கை நகலை நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.
அதில், ‘‘டி.ஜி.பி.யிடம் முன் அனுமதி பெறாமல் போலீஸ் அதிகாரிகள் யாரும் நேரடியாகவும், மறைமுகமாகவும், தனது சார்பிலும் யாரையும் அனுப்பியும், குடும்ப உறுப்பினர்கள் வழியாகவும் யாரிடம் இருந்தும் எந்த பரிசும், வெகுமதி, ஊக்கத்தொகை மற்றும் பிற பரிசுப்பொருட்களை பெறக்கூடாது. போலீஸ்துறை அதிகாரிகள் தங்களது குடும்பத்தில் நடைபெறும் திருமணம், மத சடங்குகளில் தனிப்பட்ட நண்பர்களிடம் இருந்து ரூ.200–க்கு குறைவான மதிப்புள்ள பரிசுப்பொருட்களை பெற டி.ஜி.பி.யிடம் அனுமதி பெற தேவையில்லை. போலீசார் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களின் வாகனங்களை கட்டணம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. காவல்துறை அதிகாரிகள் தனி நபர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடாது. விலை உயர்ந்த பொருட்களை தங்களுக்கு சாதகமான விலைக்கு யாரிடம் இருந்தும் வாங்கக்கூடாது. அதே போல காவல்துறையில் பணிபுரிபவர்கள் மணப்பெண் அல்லது மணமகளின் பெற்றோர், பாதுகாவலர்களிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ கூடாது. இந்த சுற்றறிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘‘மதுரை ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றி உடனடியாக சுற்றறிக்கை வெளியிட்டதற்காக டி.ஜி.பி.க்கு இந்த கோர்ட்டு பாராட்டு தெரிவிக்கிறது’’ என்றார்.