23 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு சென்று மாயமானார்: இலங்கையில் பிச்சை எடுக்கும் ராமேசுவரம் மீனவரை மீட்கக்கோரி வழக்கு, மத்திய–மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்கச்சென்று மாயமாகி, இலங்கையில் பிச்சை எடுக்கும் மீனவரை மீட்கக்கோரிய வழக்கு குறித்து மத்திய–மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்தவர் பரதன். இவருடைய மனைவி சரசு. இவர்களுக்கு சரவணசுந்தரி, முத்துலட்சுமி என்ற 2 மகள்களும், மாரி என்ற மகனும் உள்ளனர்.
மீன்பிடி தொழிலாளியான பரதன் கடந்த 1996–ம் ஆண்டு 4 பேருடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சென்ற படகு நடுக்கடலில் விபத்தில் சிக்கியது. இதில் பரதன் மாயமானார். அவரை நீண்ட நாட்களாக தேடியும் பரதன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்திருப்பார் என உறவினர்கள் நினைத்திருந்தனர். மீன் வளத்துறை பதிவேட்டிலும் அவ்வாறே பதிவாகி இருந்தது.
23 ஆண்டுகளில், அவரின் 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் பரதனின் குடும்பத்தினர் செல்போனில், இலங்கையில் பிச்சைக்காரர்களின் நிலை குறித்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளனர்.
அதில் பிச்சைக்காரர்களின் வரிசையில் பரதனை போன்ற ஒருவர் இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது பரதன் தான் என்று உறுதியாக கூற முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். பரதனின் பழைய படமும், வீடியோவில் வந்த நபரின் உருவமும் ஒற்றுமையாக உள்ளதால் அவர் உயிருடன் இருப்பதை உறுதியாக நம்புகிறோம். அவருடைய மனைவி சரசு தற்போது மனநிலை சரியில்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரிடம் கணவரை அடையாளம் காட்டுமாறு கூற முடியாத நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில் இலங்கையில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் பரதனை மீட்டு கொண்டுவரக்கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே இலங்கையில் வயது முதிர்ந்த நிலையில் பிச்சை எடுத்து கொண்டிருக்கும், தனது தந்தை பரதனை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவரது மகள் சரவணசுந்தரி, மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.