மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதி விபத்து : 3 வாலிபர்கள் பலி; 5 பேர் படுகாயம்
புனே அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புனே,
புனே மாவட்டம் சகாகர்நகர் அருகே உள்ள பத்மாவதி பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 8 பேர் நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட தல்ஜாய் மலைபகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் கேட்-சிவபுரில் உள்ள தர்காவுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் சத்தாரா நெடுஞ்சாலையில் ஷிண்டேவாடி பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று, வாலிபர்கள் சென்ற 3 மோட்டார் சைக்கிள்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 8 வாலிபர்களும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுரஜ் (வயது23), சுஷில் (24), அங்கித் (24) ஆகிய 3 வாலிபர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
படுகாயமடைந்த 5 வாலிபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி 3 வாலிபர்கள் பலியான சம்பவம் புனேயில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story