ஊட்டியில் விதிகளை மீறிய 103 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை: நகராட்சி அதிகாரி தகவல்


ஊட்டியில் விதிகளை மீறிய 103 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை: நகராட்சி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 23 July 2019 11:15 PM GMT (Updated: 23 July 2019 10:12 PM GMT)

ஊட்டியில் விதிகளை மீறிய 103 கட்டிடங் களுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் கட்டிடங்கள் கட்டுவதை வரைமுறைப்படுத்த மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்படி 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, வனப்பகுதி அல்லது நீர்நிலைகளையொட்டி கட்டிடங்கள் கட்டக்கூடாது, செங்குத்தான மலைப்பகுதியில் கட்டிடம் கட்டக்கூடாது, வீடுகளுக்கு என அனுமதி பெற்று விட்டு அதை வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊட்டி வால்சம்பர் சாலையில் வீட்டுக்கு என அனுமதி பெற்றுவிட்டு வணிக வளாகமாக மாற்றப்பட்ட கட்டிடத்தை சீல் வைக்க நகராட்சி திட்டமைப்பு அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அப்போது அந்த கட்டிடத்தில் கணினி பயிற்சி மையம் நடத்தி வந்த நபர், நோட்டீஸ் தராமல் கட்டிடத்துக்கு சீல் வைக்க வந்துள்ளதாக அதிகாரிகளை குற்றம் சாட்டினார். உடனே அதிகாரிகள், ‘நீங்கள் கையெழுத்து போட்டு கொடுத்த நோட்டீஸ் கோப்பில் உள்ளது‘ என்று கூறி அதை எடுத்து காட்டினர். அப்போது மற்றொரு நபர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து வணிக வளாக கதவை பூட்டி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதற்கான நோட்டீஸ் முன்பகுதியில் ஒட்டப்பட்டது. இதுகுறித்து ஊட்டி நகராட்சி திட்டமைப்பு அலுவலர் கூறும்போது, நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது விதிமுறைகளை மீறி வணிக நோக்கில் கட்டப்பட்ட 7 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 103 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகள் ஓரிரு நாட்களில் துண்டிக்கப்படும் என்றார்.

இதேபோன்று குன்னூர் நகராட்சி உள்ளூர் பஸ் நிலையம் மற்றும் டி.டி.கே. சாலையில் ஆற்று புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. அதன்பின்னர் குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், தாசில்தார் தினே‌‌ஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் 42 கடைகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து பஸ் நிலைய பகுதியில் மேலும் 2 கடைகளை வருவாய்த்துறையினர் அகற்றினர். கூடலூர் நந்தட்டியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கொட்டகையை வருவாய்த்துறையினர் அகற்றினர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு வருவாய்த்துறையினர் அங்கிருந்து சென்றனர்.


Next Story