ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - பணிகள் பாதிப்பு


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2019 5:00 AM IST (Updated: 24 July 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

மாநில தலைவர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கடந்த மே மாதம் 31-ந் தேதி பணி ஓய்வு பெறும் நாளில், தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், முறையாக பணி ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று வழக்கம்போல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வந்தனர்.

அவர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, அங்குள்ள ஒரு பிரிவு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் சலீம் தலைமை தாங்கினார். போராட்டம் காரணமாக அலுவலர்கள் அன்றாட பணிகளை செய்யவில்லை. இதனால் கிராம ஊராட்சி பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை பிரிவில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட தலைவர் சலீம் கூறும்போது, நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 225 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் வேலைநிறுத்தம் செய்து அந்தந்த அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ மாநில பொறுப்பாளராக சுப்பிரமணியன் இருந்து போராட்டங்களை நடத்தினார். இதனால் அவரை பழிவாங்கும் நடவடிக்கையில், ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது என்றார்.

நீலகிரியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வளர்ச்சி பணிகள், சுகாதார பணிகள், உள்ளாட்சிகளில் குடிநீர் வினியோகம், 100 நாள் வேலை திட்டம், சத்துணவு போன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இதேபோல் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநில துணை தலைவர்கள் ராஜ்குமார், ஜானகி ராமன் ஆகியோர் தலைமையில் அலுவலக ஊழியர்கள் 32 பேர் அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கின.


Next Story