கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா பேட்டி


கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா பேட்டி
x
தினத்தந்தி 24 July 2019 4:12 AM IST (Updated: 24 July 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.

கோவை,

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

வாட்ஸ்-அப், முகநூல் உள்பட சமூகவலைத்தள குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சைபர் வாரியர் என்ற புதிய திட்டம் மேற்கு மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், போலீசார் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். கல்லூரிகள் தோறும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல மரம், செடிகொடிகளை வளர்க்க மாணவ -மாணவிகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக கிரீன் வாரியர்(பசுமை திட்டம்) கல்லூரிகளில் தொடங்கப்படும். கல்லூரிகளில் அவர்கள் சேர்ந்து படித்து முடிக்கும்வரை மரங்களை வளர்த்து பாதுகாக்கும் மாணவ-மாணவிகள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

அதிவேமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி டிரைவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும்.கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை கஞ்சா கடத்தல் தொடர்பாக கோவை சரகத்தில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சேலம் சரகத்தில் கடந்த ஆண்டு 20 வழக்குகளும், இந்த ஆண்டு 21 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு்ள்ளன. போதை பொருள் கடத்தல் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு தனித்தனி வாட்ஸ்-அப் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தகவல் தெரிவிக்கலாம்.

கோவை மாவட்டம்-7708100100, நீலகிரி-8608000100, திருப்பூர்-9498101320, ஈரோடு-8939779100, சேலம்-9445978599, நாமக்கல்-9498101020, தர்மபுரி-9445652253, கிருஷ்ணகிரி-9715255248 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.

பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்புக்காகவும், பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க கோவை, நீலகிரி மாவட்டங்களில் 10 அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர நீலகிரி மாவட்டம் முதுமலை, கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் பந்திபூர் ஆகிய 3 பகுதிகளும் சந்திக்கும் பகுதியில் மாவோயிஸ்டு ஊடுருவலை தடுக்க 3 மாநில கூட்டு அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறார்கள்.

கோவை மேற்கு மண்டலம் முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதிவரை 1,501 விபத்துகள் நடந்தன. இதில், 1,592 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 1,139 விபத்துகள் நடைபெற்றன. இதில், 1,284 பேர் இறந்தனர். விபத்து உயிரிழப்பு 19.35 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 57 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story