நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல் - விழுப்புரத்தில் பரபரப்பு


நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல் - விழுப்புரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 July 2019 4:29 AM IST (Updated: 24 July 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

கூலி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்கள் 154 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.250, ரூ.300 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியத்தை கடந்த 1½ மாதங்களாக சரிவர வழங்கவில்லை என தெரிகிறது.

மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கான ‘பயோ மெட்ரிக்’ வருகைப்பதிவேடு முறையில் தினமும் காலை 6 மணி, 11 மணி, மாலை 3 மணி, 6 மணி என 4 முறை வருகைப்பதிவேடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக துப்புரவு தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

எனவே இந்த வருகைப்பதிவேடு முறையில் நிரந்தர பணியாளர்களைப்போன்று 2 முறை மட்டுமே பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர வலியுறுத்தியும், கூலி வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், இதனை சரிசெய்து முறையான கூலியை உடனுக்குடன் வழங்க வலியுறுத்தியும் நேற்று காலை 6.45 மணியளவில் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நகராட்சி ஆணையாளரிடம் இதுபற்றி கூறி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் காலை 7 மணியளவில் மறியலை கைவிட்டனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. பின்னர் துப்புரவு தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர் லட்சுமியிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.விழுப்புரத்தில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story