தென்இந்தியாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி : எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாகிறார்


தென்இந்தியாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி : எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாகிறார்
x
தினத்தந்தி 24 July 2019 5:36 AM IST (Updated: 24 July 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

தென் இந்தியாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைகிறது. எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாகிறார்.

பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமாக இருப்பவர் எடியூரப்பா. சுமார் 75 வயதாகும் எடியூரப்பா. இவர் கடந்த 2004-ம் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக தரம்சிங் இருந்தார். ஆனால் ஜனதாதளம்(எஸ்) ஆதரவை வாபஸ் பெற்று, பா.ஜனதாவுடன் கைகோர்த்தது. அதன்படி முதலில் குமாரசாமி 2½ ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தார். ஆனால் கூட்டணி ஒப்பந்தப்படி பதவி காலம் முடிந்தும் முதல்-மந்திரி பதவியை அவர் பா.ஜனதாவுக்கு விட்டுக்கொடுக்க மறுத்தார். நீண்ட இழுபறிக்கு பின்னர் முதல்-மந்திரியை அவர் பா.ஜனதாவுக்கு விட்டு கொடுத்தார். அதைதொடர்ந்து எடியூரப்பா கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் 7 நாட்கள் மட்டுமே அவர் முதல்-மந்திரியாக இருந்தார். அவரது தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

அதைதொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து எடியூரப்பா 2-வது முறையாக முதல்-மந்திரியானார். பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடியூரப்பா ஆட்சி அமைத்தார்.

3½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடித்த எடியூரப்பா மீது கனிம சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே, எடியூரப்பா மீது கனிம சுரங்க முறைகேடு அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்து பா.ஜனதா மேலிடம் உத்தரவின்பேரில் அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, எடியூரப்பா பா.ஜனதாவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பா தனித்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. எடியூரப்பா கட்சியும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் சுமார் 10 சதவீத வாக்குகளை எடியூரப்பா கட்சி பெற்றது.

எடியூரப்பா தனித்து போட்டியிட்டதால் தான் பா.ஜனதா தோல்வியை தழுவியது என்ற கருத்து அக்கட்சியில் எழுந்தது. இதையடுத்து எடியூரப்பாவை மீண்டும் பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு அடுத்த சில மாதங்களில் எடியூரப்பா மீண்டும் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

கர்நாடக பா.ஜனதா தலைவராக இருந்த பிரகலாத்ஜோஷியின் பதவி காலம் முடிவடைந்த பிறகு அக்கட்சியின் மாநில தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்டார். அன்று முதல் அவர் கட்சியின் தலைவராக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதிக இடங்களை கைப்பற்றி பெரிய கட்சியாக பா.ஜனதா விளங்கியதால், அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பாவுக்கு 2018-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி கவர்னர் முதல்-மந்திரியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மூன்றே நாட்களில் அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்து விட்டது. இதனால் தற்போது 4-வது முறையாக எடியூரப்பா முதல்-மந்திரியாகிறார். நாளை (வியாழக்கிழமை) அவர் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. ஆனால் அக்கட்சிக்கு தென்மாநிலங்களில் ஆட்சி இல்லையே என்ற குறை இருந்தது. அந்த குறை தற்போது நீங்கியுள்ளது. தென்இந்தியாவில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைகிறது. இதனால் பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story