வானவில் : சாம்சங்கின் ஸ்மார்ட் கருவிகள்


வானவில் : சாம்சங்கின் ஸ்மார்ட் கருவிகள்
x
தினத்தந்தி 24 July 2019 1:21 PM IST (Updated: 24 July 2019 1:21 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் இன்றைய வீடுகளுக்கு அத்தியாவசியமான பொருள்களாகிவரும் ஸ்மார்ட் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது.

கண்காணிப்பு கேமரா, ஸ்மார்ட் பல்பு, வை-பை பிளக் ஆகியன முதல் கட்டமாக அறிமுகமாகிஉள்ளன. இதில் ஸ்மார்ட் பல்பின் விலை ரூ.700. ஸ்மார்ட் வை-பை பிளக்கின் விலை ரூ.1,200. ஸ்மார்ட் கேமரா விலை ரூ.6,200 ஆகும்.

கண்காணிப்புக் கேமரா ஹெச்.டி. ரெகார்டிங் வசதி கொண்டது. இதில் 145 டிகிரி கோணத்தில் படங்கள் பதிவாகும். இதில் இருவழி தகவல் பரிமாற்ற வசதி உள்ளது. உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து வீட்டில் உள்ளவரை பார்த்தபடியே பேசலாம். நீங்கள் பேசுவதற்கு அவர்கள் இதன் மூலமே பதில் அளிக்கலாம். நைட் விஷன் வசதி இருப்பதால் இரவிலும் காட்சிகள் துல்லியமாக பதிவாகும். ஸ்மார்ட் திங் ஹப் இல்லாமலேயே இது செயல்படும்.

இதனால் வீட்டிலுள்ள வை-பை இணைப்பு மூலம் இதை செயல்படுத்தலாம். ஸ்மார்ட் ஹப்பில் இணைக்கப்பட்டால் அதன் மூலம் பிற மின்னணு சாதனங்களுடன் எளிதாக இணைக்க முடியும். கேமராவானது வீட்டிலுள்ள விளக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், மாலை நேரமானதும் விளக்கு எரியும்.

இதில் பதிவாகும் காட்சிகளை கிளவுட் ஸ்டோரேஜில் பதிவு செய்து கொள்ளலாம். 8 கேமராக்களை நிறுவி அவற்றில் பதிவாகும் காட்சிகளை 30 நாள் பராமரித்து அளிக்க இந்நிறுவனம் மாதத்துக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயித்து உள்ளது. டேபிளில் நிறுவுவதற்கு வசதியாக ஸ்டாண்டுடன் இது வந்துள்ளது. இதை சுவற்றிலும் நிறுவ முடியும்.

ஸ்மார்ட் வைபை பிளக் தனியாக செயல்படும். இதற்கு சாம்சங் ஹப் தேவையில்லை. இதில் ஸ்மார்ட் விளக்குகளை இணைப்பதன் மூலம் அதை உங்கள் மொபைல் மூலமே கட்டுப்படுத்த முடியும். பிக்ஸ்பி, கூகுகள் அசிஸ்டன்ட், அலெக்ஸா ஆகியவற்றின் மூலமும் இதை செயல்படுத்த முடியும்.

இந்நிறுவனத்தின் பல்பு 9 வாட் கொண்ட ஸ்மார்ட் பல்பு ஆகும். இதன் ஒளி அளவை அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும். இதுவும் குரல்வழி கட்டளைக்கேற்ப செயல்படும். இரவு நேரத்தில் தானாகவே இது ஆப் ஆகிவிடும். அல்லது வெளிச்ச அளவை குறைத்துவிடும். அதேபோல கதவைத் திறந்தவுடன் இது எரியத் தொடங்கும்.

ஸ்மார்ட் வீடுகளுக்கேற்ற சாம்சங் தயாரிப்புகளுக்கு நவீன உலகில் மிகப் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பது நிச்சயம்.

Next Story