வானவில் : எத்தனாலில் ஓடும் டி.வி.எஸ். அபாச்சே ஆர்.டி.ஆர் 200 எப்.ஐ. இ100
இருசக்கர வாகனத் தயாரிப்பில் சிறப்பாக விளங்கும் தமிழக நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார்ஸ் முதல் முறையாக எத்தனாலில் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல பிராண்டான அபாச்சி மாடல் என்ஜினில் எத்தனாலில் இயங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்புதிய மாடல் அபாச்சே ஆர்.டி.ஆர் 200. எப்.ஐ. இ100 என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ.1.20 லட்சமாகும். பெட்ரோல் மாடலைக் காட்டிலும் ரூ.9 ஆயிரம் அதிகமாகும். இப்போதைக்கு இந்த மாடல் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இந்த மூன்று மாநிலங்களில் மட்டும்தான் எத்தனால் கிடைக்கிறது. இந்த மாடல் மோட்டார் சைக்கிளை சாதாரண பெட்ரோலைப் போட்டு ஓட்ட முடியாது. 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த மாடலை டி.வி.எஸ். நிறுவனம் காட்சியப்படுத்தியிருந்தது. ஆனால் தற்போதுதான் இந்த மாடல் சில மாநிலங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது.
சர்க்கரைப் பாகிலிருந்து வெளியேறும் கழிவை நொதிக்க வைத்து அதிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை உற்பத்தி அதிகம் உள்ள மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் எத்தனால் கிடைக்கிறது. இதனால் இங்கு அபாச்சே மாடலை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பெட்ரோலுக்கு சற்று குறைவான எரிதிறன் கொண்டது எத்தனால். இருப்பினும் கம்பஸ்டன் என்ஜினில் இதன் எரிசக்தியை அதிகரிக்கச் செய்துள்ளனர். இதனால் பெட்ரோலில் இயங்கும் அபாச்சே மோட்டார் சைக்கிளுக்கும், எத்தனாலில் இயங்கும் மோட்டார் சைக்கிளுக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. இதனால் 197 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் 21 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 18.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. ஒரு லிட்டர் எத்தனால் ரூ.52 முதல் ரூ.55 விலையில் கிடைக்கிறது.
இதனால் பெட்ரோல் மாடலை விட இதை வாங்கிப் பயன்படுத்துவது லாபகரமானது. அத்துடன் இது சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானதாகும். எத்தனால் உற்பத்தி பிற மாநிலங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் போது அபாச்சே மாடலுக்கு மிகுந்த கிராக்கி ஏற்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story