தூசி அருகே ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதல்; அரசு பஸ் டிரைவர் பலி 14 பேர் படுகாயம்


தூசி அருகே ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதல்; அரசு பஸ் டிரைவர் பலி 14 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 July 2019 3:30 AM IST (Updated: 24 July 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே ஆட்டோ - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூசி, 

தூசி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் உசேன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு சிப்காட் நிறுவனத்தில் வேலை செய்யும் 13 பெண்களை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சிப்காட் நோக்கி சென்றார். தூசி, மாதாகோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும், ஆட்டோவும் திடீரென நேருக்குநேர் மோதிக்கொண்டது.

மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. அதில் இருந்த டிரைவர் உசேன், சாந்தி (37), லட்சுமி (28), சுகந்தி (38), ஆனந்தி (25), சங்கரி (35), சாலினி (28), ராதிகா (28), ஜெயசித்ரா (27), பவித்ரா (23), அனிதா (36) உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

மோட்டார்சைக்கிளில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று ஆட்டோவில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த சங்கர் (46) என்பதும் அவர் சென்னையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சங்கரின் மனைவி உமா தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சங்கருக்கு ஸ்ரீலேகா (20) என்ற மகளும், பரத் (16) என்ற மகனும் உள்ளனர்.

Next Story