கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு நேற்று, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, எங்களின் அடிப்படை வசதிகள், எங்களுக்கான சலுகைகள் குறித்து பல்வேறு மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கொடுத்தோம். ஆனால் அவை அனைத்தும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது. எனவே எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி வங்கி கடன் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் 6 மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். அதிகாரிகள் கூறியபடி தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாற்றுத்திறனாளிகள் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story