பவானிசாகர் அருகே துணிகரம் கோவிலுக்குள் புகுந்து தங்கம்–வெள்ளி நகைகள் திருட்டு


பவானிசாகர் அருகே துணிகரம் கோவிலுக்குள் புகுந்து தங்கம்–வெள்ளி நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 24 July 2019 10:15 PM GMT (Updated: 24 July 2019 6:36 PM GMT)

பவானிசாகர் அருகே கோவிலுக்குள் புகுந்து தங்கம்–வெள்ளி நகைகள் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தயிர்பள்ளம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் உள்ளார். இவர் நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தபின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை பூசாரி ரமேஷ் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது கோவிலில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் அம்மனின் வெள்ளி பொருட்கள், கிரீடம் மற்றும் தங்க தாலிச்சங்கிலியை காணவில்லை. கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வெள்ளி மற்றும் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

மேலும் இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கம்–வெள்ளி நகைகள் திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை துணிகரமாக திருடிச்சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story