ராகிங்கை தடுப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகிங்கை தடுப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ராகிங் தடுப்பது குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
கல்லூரிகளில் புதிதாக முதலாமாண்டு சேரும் மாணவர்கள் மீது தொடுக்கப்படும் ராகிங் குறித்த புகார்களை பதிவு செய்ய ஏதுவாக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரின் (பொது) 94450 08141 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் இது தொடர்பாக இந்திய அரசின் www. antiragging.in என்ற இணையதள முகவரியிலும் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-180-5522 ஆகியவற்றின் மூலமாகவும் புகார் தெரிவிக்க ஏதுவாக இந்த தகவல்களை மாணவ, மாணவிகளின் அடையாள அட்டையிலும் மற்றும் கல்வி நிறுவன அறிவிப்பு பலகையிலும் குறிப்பிட வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ராகிங் செய்வதை தடுக்கும் பொருட்டு குழு அமைக்கப்பட்டுள்ள விவரம், குழு உறுப்பினர்களின் விவரத்தையும், செல்போன் எண்களையும் கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் தெளிவாக தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும். ராகிங்கை தடுப்பது தொடர்பாக கல்லூரி நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கல்லூரிகளில் மாணவர்களை ராகிங் செய்யும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ இது குறித்து போலீசில் புகார் அளிக்கும் போது எவ்வித தாமதமுமின்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கல்லூரி வளாகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
கல்லூரி ஆண்டு தொடக்கத்தில் அனைத்து கல்லூரி முதல்வர்களும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களை அழைத்து, ஒவ்வொரு ஆண்டின் ஜூலை மாதத்தில் முதல் வாரத்தில் கூட்டம் நடத்தி, கூட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக அனுப்பிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் குமரேசன், தெய்வநாயகி, துணை கலெக்டர் (பயிற்சி) சுகந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, பாஸ்கர் மற்றும் கல்லூரி முதல்வர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story