காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது


காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரிமங்கலம்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி வீட்டில் இருந்து சைக்கிளில் காரிமங்கலத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். சம்பவத்தன்று மாணவி கல்லூரி முடிந்து காரிமங்கலத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர் அவர் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

மொட்டலூர் ஏரிக்கரையில் சென்ற போது கும்பாரஅள்ளி அருகே உள்ள குள்ளன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது26) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story