மாவட்ட செய்திகள்

அவசரமாக இறங்கிய போது தவறி விழுந்தார்: ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி போராடிய பெண் சுவரை உடைத்து மீட்டதால் பரபரப்பு + "||" + The woman struggling to get stuck between the rail and the platform

அவசரமாக இறங்கிய போது தவறி விழுந்தார்: ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி போராடிய பெண் சுவரை உடைத்து மீட்டதால் பரபரப்பு

அவசரமாக இறங்கிய போது தவறி விழுந்தார்: ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி போராடிய பெண் சுவரை உடைத்து மீட்டதால் பரபரப்பு
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து அவசரமாக இறங்கியதால் தவறி விழுந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி போராடிய பெண் உயிருடன் மீட்கப்பட்டார். சுவரை உடைத்து அவரை மீட்டதால் மதுரை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

சென்னையில் இருந்து மதுரை, நெல்லை வழியாக கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. 5 நிமிடம் கழித்து 1–வது பிளாட்பாரத்தில் இருந்து ரெயில் புறப்பட தயாரான போது, எஸ்–11 பெட்டியில் இருந்து பெண் ஒருவர், கைச்சுமைகள் மற்றும் 2 பேருடன் ரெயிலில் இருந்து அவசரமாக இறங்க முற்பட்டார்.

இதற்கிடையே ரெயில் புறப்பட்டு சற்று தூரம் சென்று விட்டது. அப்போது, உடன் வந்த 2 பேரும் இறங்கிவிட, அந்த பெண் இறங்கிய போது, தவறி விழுந்து ரெயிலுக்கும் பிளாட்பார பக்கவாட்டு சுவருக்கும் இடையே சிக்கிக்கொண்டு போராடினார். அதையடுத்து, ரெயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் மற்றும் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

ரெயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அபாயசங்கிலியை பிடித்து இழுத்து உடனடியாக ரெயிலை நிறுத்தினர். தகவல் அறிந்தவுடன் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர், பிளாட்பார இன்ஸ்பெக்டர், ரெயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அவரை உடனடியாக மீட்டு வெளியே கொண்டு வர முடியவில்லை. இதற்காக பிளாட்பாரத்தின் பக்கவாட்டு சுவரை இடிக்கும் பணி நடந்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் மீட்க முடியவில்லை. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு, கூடுதல் கோட்ட மேலாளர், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமி‌ஷனர் ஆகியோரும் வந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். பின்னர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பினார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த ரெயில்வே போலீசாரின் விசாரணையில், ரெயிலுக்குள் சிக்கிய பயணி மதுரையை சேர்ந்த விஜயபூர்ணிமா(49) என்பதும், அவருடன் வந்தது மகன்கள் விஜய் ஆகாஷ்(18), அஸ்வின்ராம் (8) ஆகியோர் எனவும் தெரியவந்தது.

பயணத்தின் போது அயர்ந்து தூங்கிவிட்டதால், மதுரை வந்து அந்த ரெயில் புறப்பட்ட போது கவனித்ததால் அவசரமாக விஜயபூர்ணிமா இறங்கி உள்ளார். அப்போதுதான் தவறி கீழே விழுந்து ரெயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் நேற்று அதிகாலையில் மதுரை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால், அடுத்தடுத்து மதுரை வரவேண்டிய ரெயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.