பட்டாகத்தியுடன் நடுரோட்டில் மோதல் சம்பவம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் இடைநீக்கம்


பட்டாகத்தியுடன் நடுரோட்டில் மோதல் சம்பவம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் இடைநீக்கம்
x
தினத்தந்தி 25 July 2019 5:15 AM IST (Updated: 25 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

பட்டாகத்தியுடன் நடுரோட்டில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக கல்லூரி மாணவர்கள் 2 பேரை அந்த நிர்வாகம் இடைநீக்கம் செய்து இருக்கிறது.

சென்னை,

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நேற்றுமுன்தினம் நடுரோட்டில் பட்டாகத்தியுடன் மோதி கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாநகர பஸ்சை வழிமறித்து இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. இதில் தொடர்புடைய 2 மாணவர்களை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

இந்தநிலையில் மாணவர்களின் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து கேட்டறிவதற்காக கல்லூரிக்கல்வி இயக்குனர் (முழுக்கூடுதல் பொறுப்பு) சி.ஜோதி வெங்கடேஷ்வரன் பச்சையப்பன் கல்லூரிக்கு நேற்று வந்தார். அதேபோல் அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமியும் வந்திருந்தார். இவர் கள் மாணவர்களின் செயல்கள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர்.

கல்லூரிக்கல்வி இயக்குனர் உடனடியாக ஆட்சிக்குழுவை கூட்டி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ஆட்சிக்குழு கூட்டம் உடனடியாக கூடியது. இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. பின்னர், கல்லூரி முதல்வர் பி.அருள்மொழி செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களில் தற்போது வரை 2 பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர். அதன்படி, எஸ்.மதன் (பி.ஏ. தத்துவம் 3-ம் ஆண்டு), எஸ்.சுருதி (பி.ஏ. வரலாற்று படிப்பு 3-ம் ஆண்டு) ஆகிய 2 மாணவர்கள் ஆட்சிக்குழுவின் ஆலோசனையின்படி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அதேபோல், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரிக்குழுவை சேர்ந்தவர்கள், துறைத்தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களுடைய பெற்றோருடன் இந்த விசாரணைக்குழுவுக்கு முன்பாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

விளக்கம் அளிக்காத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். தவறு செய்யும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகமும், அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை பச்சையப்பன் கல்லூரி வழங்கி வருகிறது. கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறுவது இல்லை.

கல்லூரி மாணவர்களில் ஒரு சிலரால் நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. சமீபத்தில் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 26 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 4 மாணவர்கள் நிர்வாகத்திடம் நேரடியாக விளக்கம் அளித்ததால் கல்லூரியில் மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு உரிய ஆலோசனை பேராசிரியர்களால் வழங்கப்பட்டது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகத்தின் தண்டனை தீவிரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story